வரகு அரிசி போண்டா

தேவையான பொருட்கள்

வரகுஅரிசி மாவு            - 300 கிராம்
கடலை மாவு                   - 200 கிராம்
மிளகாய்த்தூள்                - 2 தேக்கரண்டி
சின்னவெங்காயம்        - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது   - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள்                         - சிறிதளவு
கொத்தமல்லி                - ஒரு சிட்டிகை
உப்பு                                  - தேவையான அளவு
எண்ணெய்                     - பொரிக்க தேவையான அளவு


செய்முறை

எண்ணெயை தவிர அனைத்து பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து ஒன்றாக கவந்து போண்டா மாவு பதத்திற்கு கட்டி ஏதும் இல்லாமல் பிசைந்து கொள்ளவும். பிறகு கடாயில் (வாணலியில்) எண்ணெயை காயவைத்து மாவை உருட்டிப்போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான இப்போண்டாவுடன் தேங்காய் சட்னி கலந்து பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.


வரகு பற்றிய ஒரு குறிப்பு
வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.

இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.

வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வும் அதன் பயன்பாடு பற்றிய புரிதலும் ஏற்பட்டுள்ளதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.

வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால், தொண்டையில் அடைத்துக் கொண்டு ஒருவிதமான ஒவ்வாமையை உண்டாக்கும்.


மருத்துவ பயன்கள்
அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
சர்க்கரை அளவை குறைக்கிறது.
மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

பிற பயன்பாடு
வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது.
வீடுகளில் கூரை வேய்வதற்கு வரகுத்தாளை பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

வரகு
பேரினம்:     Panicum
இனம்:     P. miliaceum