கேழ்வரகு (ராகி) மாவு புட்டு

கேழ்வரகு (ராகி) மாவு புட்டு

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு        - 2 கப் (ராகி மாவு)
தேங்காய் துருவல்   - தேவையான  அளவு
உப்பு                            - 1 தேக்கரண்டி
வெல்லம்                   - 100 கிராம்
நெய்                            - 2 தேக்கரண்டி
முந்திரி                       - 5 எண்ணிக்கை



செய்முறை

ராகி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் சேர்தது அதில் சிறிது வெதுவெதுப்பான நீரை தெளித்து கலக்கவும். மாவை கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும்படியும், கையில் இருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும்படியும் இருக்கவேண்டும். இதனை இட்லி தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். பிறகு வேகவைத்த மாவை எடுத்து அதனுடன் வெல்லம் தேங்காய் துருவல் மற்றும் சிறிதளவு நெய் ஆகியவற்றை கலக்கவேண்டும்,
முந்திரியை நெய்யில் வறுத்து அதனை சிறிய துண்டுகளாக்கி கடைசியாக புட்டின்மேல் தூவவும் 
இப்போது கம கமக்கும் சத்தான ராகி புட்டு தயார்.
கேழ்வரகு புட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் உண்ணக்கூடிய இனிய சத்தான உணவு



பயன்கள் மற்றும் குறிப்புகள்

குறிப்பு


 ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை... இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானியமாகும். இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங்களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவைஇல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது, சரி சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது... உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக்காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம்.

பயன்கள்

ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
குடலுக்கு வலிமை அளிக்கும்.
கேழ்வரகில்  உள்ள  நார்  சத்துக்கள் மலச்சிக்கலை  தடுக்கிறது .
உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.



இதில் ஆக்ஸாலிக்  அமிலம்  அதிகம்  உள்ளதால் ,சிறுநீரக  கற்கள் உள்ளவர்கள்  இதை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது .