இட்லி (இட்டளி) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு வகையாகும். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவுவகைகளில் இது முதன்மையானது. அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற பொருள்களைக் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. அதிலும் இட்லி உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த காலை உணவாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். புற்றுநோயை தடுக்கும் :-
ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இதுதான் கேன்சர் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் பிராக்கோலியை விட, அவிக்கப்படும் போது குளுக்கோசினோலேட்ஸ் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
உடல் எடை குறைய இதய பாதுகாப்புடன் இருக்க :-
அவித்து சமைக்கும் உணவுகளை சாப்பிடும் போது கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
எண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. கொழுப்புச்சத்து இல்லாததே இதற்கு காரணம் ஆகும். எனவே, இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
இட்லியானது வெற்று சுவையைக் கொண்டதால் தனியாக உண்ணும்போது நல்ல சுவையாக இருக்காது. இட்லியின் சுவையினைக் கூட்டுவதற்காக சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி, இட்லிப் பொடி போன்றவற்றை அதனுடன் சேர்த்துக்கொள்வார்கள். இவ்வாறு சிறப்பு மிக்க அரிசி இட்லியை எவ்வாறு செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக சுமார் 3 முதல் 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும். பிறகு, இரண்டு மாவினையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தாலே போதுமானதாகும் ஆனாலும் பெரும்பாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
இரண்டு மாவுகளையும் ஒன்றாக்கி உப்பு சேர்த்து புளிக்க வைத்து இட்லி தட்டில் வேகவைத்தால் நல்ல மிருதுவான இட்லி கிடைக்கும். இட்லி மாவைக்கொண்டே தோசையும் செய்யலாம். இட்லி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி தோசையாக ஊற்றிக்கொள்ளலாம்.