பூண்டுச் சட்னி

பூண்டுச் சட்னி


பூண்டு என்றவுடன் நம்மில் பலர் முகம் சுழிப்பதை நாம் பார்த்திருக்கலாம்.  பூண்டை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைப்பதோடு ஆரோக்கியமாக வாழவும் முடியும்.

பூண்டின் நன்மைகள்
       
        சரும தொற்றுகள் நீங்க பூண்டு பயன்படுகிறது.
        இரத்த கொதிப்பை குறைக்கவும் பயன்படுகிறது.
        இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.
        கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது
        அலர்ஜிகளை எதிர்க்கும் திறன் வாய்ந்தது
        சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வு காண உதவுகிறது
        சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது
        புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது
        தேவையற்ற கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க       
        உதவுகிறது

உடம்பில் இருக்க கூடிய தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அனைவருக்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  தினமும் உணவில் பூண்டு இருக்க வேண்டும்.

நம் ரத்தத்தில் உள்ள ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும் வல்லமை கொண்டது இந்த வெள்ளை பூண்டு.

இருமல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல பலனை தரும்.

நெஞ்செரிச்சல், இதய பிரச்சனைகளுக்கும் பூண்டு ஒரு நல்ல நிவாரணியாக கருதப்படுகிறது. முடி உதிர்வுக்கும் வெள்ளை பூண்டை அரைத்து பயன்படுத்தலாம்.

பூண்டை உணவில் மட்டுமல்லாமல் பாலிலும் கலந்து குடிக்க மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உடலில் ரத்த ஓட்டம், அழுத்தம் அனைத்து பிரச்சனைகளுக்கும் வெள்ளை பூண்டு சிறப்பாக பயன் தரக்கூடியது.


 இப்படி பல நன்மைகளைக்கொண்ட பூண்டிலிருந்து பூண்டு சட்னி எவ்வாறு தயாரிப்பது என்பதை காண்போம்.

பூண்டு சட்னியை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர். மேலும் இதனை இட்லி, தோசை போன்றவற்றிற்கு சட்னியாக பயன்படுத்திக்கொள்ளலாம். சாப்பாட்டிற்கு ஊறுகாயாகவும், துவையல் போன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம். மாலை நேர சிற்றுண்டிகளுக்கும் இதனைப்பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய்       -  3 டீஸ்பூன்
சின்னவெங்காயம்   - 15 No's
பூண்டு                         - 25 பல்
காய்ந்த மிளகாய்      - 7 No's
கடுகு                           - அரை டீஸ்பூன்
உளுந்து                      - அரை டீஸ்பூன்
புளி                              - சிறிதளவு
உப்பு                            - தேவையான அளவு

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்னவெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து வதக்கி ஆறவிடவேண்டும். ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். இதனை தனியாக வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து நன்றாக கிளறி  இறக்கிவைத்துக்கொண்டால் சுவையான பூண்டுச்சட்னி தயார்.  

சமையல் குறிப்புகள் - 1

1. காய்கறிகளின் நிறம் பளச்சென இருக்க காய்கறிகளை வேகவைக்கும்போது அதனுடன் சிலதுளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

2. ரவா கேசரி கிளறும்போது அதில் ஆப்பிள், பைனாப்பிள், திராட்சை மற்றும் மாம்பழத்துண்டுகளை இறக்கும் முன் கலந்து கிளறவும். வித்தியாசமான பழக்கேசரி ருசியாக இருக்கும்.

3. பாகற்காயை உப்பு, மோர் பிசறி ஊறவிட்டு பின்னர் பிழிந்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பொரியல் செய்தால் கசப்பே தெரியாது. அனைவரும் விரும்பி உண்பர்.

4. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், உப்பு, புளி ஆகியவற்றை சூடான வாணலியில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்த பொடியில் சிறிதளவே வதங்கும் கறிகாய் மீது தூவினால் ருசியாக இருக்கும்